திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அணுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்குவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. 2 ஆண்டுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரைத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ‘கந்த சஷ்டி’ திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு கந்த சஷ்டி விழா, வரும் 25-ம் தேதி காலை  யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து  சுமார் 5 லட்சம் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவல் தடுப்பு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டாக கந்த சஷ்டி விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் திருச்செந்தூரில் குவியும் என்று தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் இந்த 6 நாள்களும் திருக்கோயிலின் உள்பிராகாரத்தில் தங்கியிருந்து யாகசாலை பூஜைகளில் கலந்து கொண்டு விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பழைய கட்டடங்களின் இடிப்புப்பணி காரணமாக உள் பிராகாரத்தில் பக்தர்கள் தங்கிட அனுமதி இல்லை எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து உள் பிராகாரத்தில் தங்கிட அனுமதி அளித்திட இந்து முன்னணியினர் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 28-ம் தேதி தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் சுமார் 300 கோடி செலவில் பெருந்திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, பணிகள் தொடங்கி பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதனால் பக்தர்களின் பாதுகாப்பு  மற்றும் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு கோயிலின் உள்பிராகாரத்தில் உள்ள பாந்துகளில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. அதனால், கோயில் வெளி வளாகத்தில் 13 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது வசந்த மண்டபம், வேலவன் விடுதி, கலையரங்கம் பின்புறம், திருமண மண்டபம், திருநீறு மண்டபம், வடக்கு டோல்கேட், நாழிக்கிணறு பஸ் நிலையம் பகுதி, உணவுக் கூடம், கிழக்கு கிரிப் பிராகாரம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பணிகள் கந்த சஷ்டித் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக நிறைவு செய்யப்படும். இந்தக் குடில்களில் 13,000 முதல் 15,000 பக்தர்கள் வரை தங்கலாம். மேலும், பக்தர்களின் வசதிக்காகக் கோயில் வளாகத்தில் 7 இடங்களில் 237 கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாதயாத்திரை பக்தர்களுக்கும், தங்கி விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காகக் கூடுதலாக ஆண்கள், பெண்கள் என தலா 50 தற்காலிகக் கழிப்பறைகள் அமைக்கபட உள்ளது. அதேபோல், தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும் பக்தர்களுக்காக 21 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட உள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் 26 இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.