வரும் அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் பூமிக்கு அருகே வியாழன் கோள் வந்து சென்றது. 59 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகே வந்த வியாழன் கோள் அடுத்து 107 ஆண்டுக்குப்பின் தான் மீண்டும் வருமாம். அதேபோல் தற்போது மற்றொரு வானியல் நிகழ்வு ஒன்றுக்கும் பூமி தயாராகி உள்ளது. வரும் அக்டோபர் 25-ம் தேதி அன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது.
வானியல் நிகழ்வுகளில் முக்கியமானவை கிரகணங்கள். இவற்றில் சந்திர கிரகணம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் நிகழ்வு ஆகும். அதேபோன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது.
பொதுவாகவே மூன்று விதமான சூரிய கிரகணம் நடக்கிறது. முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம். இப்போது நடக்க இருப்பது பகுதி சூரிய கிரகணம்.
பகுதி சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவோ, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும். இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம். பகுதி சூரிய கிரகணத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரக்கூடிய சந்திரன், சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக, சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படும்.
எப்போது, எங்கிருந்தெல்லாம் பார்க்கலாம்?
அக்டோபர் 25 ஆம் தேதி நடக்கும் பகுதி சூரிய கிரகணம் காலை 8:58 மணிக்கு தொடங்கி மதியம் 1:02 மணிக்கு முடிவடையும். எப்போதுமே சூரிய கிரகணம் என்பது உலகத்தின் ஒரு சிறு பகுதியில் மட்டும்தான் தென்படும். தற்போது நடக்கும் பகுதி சூரிய கிரணம் இந்தியாவில் தெரியும். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, வட அட்லாண்டிக் பெருங்கடல், மேற்கு சீனா, இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
அடுத்த சூரிய கிரகணம் 2025ஆம் ஆண்டில்தான் நிகழும். ஆனால் இது இந்தியாவில் தென்படாது. இனி அடுத்து 2032ஆம் ஆண்டில் நிகழும் சூரிய கிரகணத்தைத்தான் இந்தியாவில் இருந்து பார்க்க முடியும்.
இதையும் படிக்கலாமே: தென் அமெரிக்க நாடுகளில் தென்பட்ட முதல் சூரிய கிரகணம் – பார்த்து ரசித்த மக்கள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM