கடந்த மார்ச் 3, 2002 அன்று, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிந்தைய கலவரத்தின்போது, குஜராத் மாநிலம், தஹோத் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரின் 2 வயது குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பல்வேறு நீதிமன்ற போராட்டங்களுக்குப் பிறகு, இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிறைத் தண்டனை அனுபவித்துவந்த குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்ய ஒப்புதல் அளித்ததையடுத்து, குற்றவாளிகள் 11 பேரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள், சிறை வாசலிலேயே ஆரத்திஎடுக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் பா.ஜ.க அரசு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனத்தைப் பெற்றது. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பியூரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, மற்றொருவர் என 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு குஜராத் அரசுக்கு உத்தவிட்டது. அதனடிப்படையில், நேற்று குஜராத் அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
அதில், “சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரும் பாதிக்கப்பட்டவரின் மதத்தை அடிப்படையாக வைத்து குற்றம் செய்தவர்கள். 2 வயது குழந்தையைக்கூட கருணையோடு விட்டுவைக்கவில்லை. அதனால், கொடூரமான குற்றங்களை செய்த இவர்களை விடுவிக்கக் கூடாது” எனத் தெரிவித்தது. ஆனால், குஜராத் பா.ஜ.க அரசு, குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு 2022 ஜூன் 28-ம் தேதி கடிதம் அனுப்பியிருக்கிறது. இந்தக் கடிதத்துக்கு ஜூலை 11-ம் தேதி அதாவது, 2 வாரங்களுக்குள் மத்திய உள்துறை அமைச்சகம் 11 குற்றவாளிகளையும், சி.ஆர்.பி.சி 435 பிரிவின் கீழ் விடுதலை செய்ய அனுமதியளித்தது தெரியவந்திருக்கிறது.
11 பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்ய பா.ஜ.க அரசு மெனக்கெட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் செங்கோட்டையிலிருந்து பெண்கள் மரியாதை பற்றி பேசுகிறார். ஆனால், உண்மையில் ‘பாலியல் குற்றவாளிகளுக்கு’ ஆதரவளிப்பவர். பிரதமரின் வாக்குறுதிக்கும் நோக்கத்துக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது. பிரதமர், பெண்களை மட்டுமே ஏமாற்றியிருக்கிறார்” என்று பதிவிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, “பில்கிஸ் பானோ வழக்கின் 11 குற்றவாளிகள் விடுதலையானதும், அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. வெற்றித் திலகமிடப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலையாளி குர்மீத் ராம் ரஹீம் 40 நாள்கள் பரோலில் வெளியே வந்ததும், அவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் பா.ஜ.க-தான் ஆட்சியில் உள்ளது. ஏன் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பா.ஜ.க ஹீரோவாக நடத்துகிறது… 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முன்வந்த நரேந்திர மோடி, அமித் ஷா இந்தியப் பெண்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதியும், “இந்தியாவின் பெண்கள், சமூகத்திடமும், சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களிடமும் நீதி கேட்கும் நம்பிக்கையற்ற நிலை வெட்கக்கேடானது. பில்கிஸ் பானோ வழக்கில் நீதியை உறுதி செய்யும் பொறுப்பை அரசு கைவிட்டுவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.