மதுரை: பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் தாக்கும் மனநிலையில் உள்ள மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி புகட்ட வேண்டியது அவசியம் என உயர் நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் உட்பட 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறள்களை அவற்றின் பொருளுடன் சேர்க்க உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த ராம்குமார், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு இன்று விசாரித்து பிறப்பித்த உத்தரவில், “அறிவுரை கூறும் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மாணவர்கள் தாக்கும் நிலை தற்போது உள்ளது. இதனால் மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி புகட்ட வேண்டியது அவசியம். தற்போது பள்ளித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இல்லை.
இதே நிலை நீடித்தால் பள்ளித் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் குழுவை கலைக்க வேண்டியது வரும். மனு தொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.