மத்தியப் பிரதேசத்தில் மொபைல் போன் திருடியதாக ஒன்பது வயது சிறுவனை கிணற்றின் உள்ளே கயிற்றில் கட்டி தொங்க விட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் மொபைல் போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது வயது சிறுவனை கிணற்றில் தலைகீழாக கயிற்றில் கட்டி தொங்கவிட்டு மிரட்டிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சத்தர்பூர் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள உட்கோஹா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்பது வயது சிறுவன் ஒருவனை மொபைல் போன் திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தில் வசிக்கும் சிலர் அழைத்துச் சென்றுள்ளனர். மொபைல் திருடியதற்கு தண்டனை தரும் நோக்கில், கிணறு ஒன்றிற்குள் கயிறு கட்டி தொங்க விட்டு, தண்ணீருக்குள் தூக்கி எறிந்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
கிணற்றுக்குள் கயிற்றில் தொங்க விடப்பட்ட நிலையில் இருந்த சிறுவனை அவனது குடும்பத்தை சேர்ந்த 14 வயது நிரம்பிய மற்றொரு சிறுவன் வீடியோ பதிவு செய்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அந்த பகுதியில் வசிப்போரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்ததை அடுத்து அஜித் ராஜ்புத் என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 308 மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட அஜித் ராஜ்புத் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவத்தை வீடியோ பதிவு செய்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் தாக்கியதாக மற்றொரு புகார் எழுந்துள்ளது.
வீடியோ எடுத்த சிறுவன் சம்பவத்தை குழப்பி விட்டதாகவும் வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால் பிரச்சினையை தீர்த்திருக்கலாம் என்று காவல்துறையினர் தன்னிடம் கூறியதாக சிறுவன் தெரிவித்துள்ளான். இருப்பினும், லவ்கோஷ் நகர் காவல் நிலைய பொறுப்பாளர் ஹேமந்த் நாயக் சிறுவனின் இந்த புகாரை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில், விரைவில் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM