நியூ ஜெர்சி,
புளோரிடாவின் தம்பா நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து பாம்பை பிடிக்க நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இதுகுறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி போர்ட் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தின் வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் போர்ட் போலீசார் ‘யுனைடெட் ப்ளைட் 2038’-ல் இருந்த கார்டர் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக விமானம் தரையிறங்கிய போது பயணிகள் இறங்குவதற்காக செல்லும்போது வணிக வகுப்பில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டனர். பாம்பைக் கண்டவுடன் பயணிகள் பயத்தில் கூச்சலிட தொடங்கினர். இதையடுத்து விமானத்தில் பாம்பு இருப்பது அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பாம்பு அகற்றப்பட்ட பிறகு, பயணிகள் தங்கள் பொருட்களுடன் தரையிறங்கினர். மேலும் பாம்புகள் ஏதேனும் விமானத்தில் இருக்கிறதா என்று தேடப்பட்டது. வேறு எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.