கோல்கட்டா: டயரியாவுக்கு உடனடி தீர்வு தரும் ஓரல் ரீஹைட்ரேசன் சொல்யுசன்(ஓஆர்எஸ்) கரைசலை கண்டுபிடித்த பிரபல டாக்டர் திலீப் மஹாலானாபிஸ் கோல்கட்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்.,16) காலமானார். 87 வயதான டாக்டர் திலீப் நுரையீரல் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார்.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில், காலரா போன்ற நோய்கள் பரவ துவங்கின. இதனால், உடலில் நீர்ச்சத்து குறைந்து பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உயிரிழக்க துவங்கினர். தண்ணீர், குளுக்கோஸ் மற்றும் உப்பு ஆகியவை இணைந்த ஓஆர்எஸ் கரைசலானது, நோயினால் பாதிக்கப்பட்டவரின் உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுத்து உயிரிழப்பை குறைத்தது. இது தான் இருப்பதிலேயே மிகவும் எளிய மற்றும் செலவு குறைந்த மருந்து. பெரும்பாலானவர்களின் முதல் தேர்வும் ஓஆர்எஸ் கரைசல் தான். இதனை கண்டுபிடித்தவர் திலீப் மஹாலானாபிஸ்.
கடந்த 1971ம் ஆண்டு வங்கதேச போரின் போது, மே.வங்க மாநிலத்தில் இருந்த அகதிகள் முகாமில் டாக்டர் திலீப் பணியாற்றினார். அப்போது வேகமாக காலரா பரவி மக்களை அச்சுறுத்தி வர ஓஆர்எஸ் கரைசல் கொடுத்து ஆயிரகணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றினார். இந்த மருந்து தான் 20ம் நூற்றாண்டில் முக்கிய மருத்துவ கண்டுபிடிப்பு என லான்செட் நாளிதழ் பாராட்டு தெரிவித்தது. தொடர்ந்து, 1975 முதல் 1979 வரை ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் ஏமன் நாடுகளில் காலராவை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பின் கீழ் பணியாற்றினார். 1980, பாக்டீரிய நோய்கள் குறித்த ஆராய்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
கடந்த 2002ம் ஆண்டு கொலம்பிய பல்கலைகழகத்தின் பொலின் விருது திலீப்பிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதானது, குழந்தைகள் சிகிச்சையில் நோபல் பரிசுக்கு இணையானது ஆகும்.இத்தகைய பெருமை கொண்ட திலீப் மறைவுக்கு, ஏராளமானோர் இரங்கல் தெிரவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement