வங்கக்கடலில் புதிதாக புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தமான் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 22ம் தேதி, காற்றழுத்தத்தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வுமண்டலமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் இருக்கக்கூடிய சீரான நிலை தொடரும்பட்சத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் அடுத்த 72 மணி நேரத்தில் புயலாக உருமாறி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியை நோக்கி நகர்ந்து கரையை கடப்பதற்காக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.