மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சூப்பர்12 சுற்றில் நேரடியாக களம் காணும் அணிகள் போட்டிக்கு தயாராகும் பொருட்டு தலா 2 பயிற்சி ஆட்டங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை பதம் பார்த்தது. அந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். கொரோனாவில் இருந்து மீண்டு வந்த முகமது ஷமி ஒரே ஓவரில் 4 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த நிலையில் பிரிஸ்பேனில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்று இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது போல் இந்த ஆட்டத்திலும் இந்திய அணி அசத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்று நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டங்களில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் (காலை 8.30 மணி), தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.