தேவதானப்பட்டி: பெரியகுளம் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து அரசு பருத்தியை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இப்பகுதியில் அரசு பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது.
கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் பெண்கள் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில், பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பெரியகுளம் பகுதியில் லட்சுமிபுரம், சல்லிபட்டி, சரத்துப்பட்டி, வடுபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், முதலக்கம்பட்டி, வைகைபுதூர், சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, மருகால்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, எண்டப்புளி, காமாட்சிபுரம், வேல்நகர், தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, தேவதானப்பட்டி, சாத்தாகோவில்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, கோட்டார்பட்டி ஆகிய இடங்களில் பருத்தி சாகுபடி அதிகளவில் நடைபெற்று வந்தது.
கடந்த 20 வருடங்களுக்கு முன் தேனியில் பருத்தி-காட்டன் கார்ப்பரேஷன் நிலையம் செயல்பட்டு வந்தது. அப்போது மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. அப்போதைக்கு காட்டன் கார்ப்பரேசன் நிலையத்தில் குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பருத்தி காட்டன் கார்ப்பரேஷன் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். அதன்பின்னர் 20 ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்தில் இருந்த காட்டன் கார்ப்பரேஷன் நிலையம் மூடப்பட்டது.
அதன்பின்னர், தேனியில் பருத்தி கமிஷன் கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டது. பருத்தி சாகுபடியில் செலவினங்கள் அதிகரித்தது. ஆனால், பருத்திக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி கட்டுபடியாகாத பயிராக மாறியது. மேலும் நோய் தாக்குதல், புழு தாக்குதல், வேர் புழு தாக்குதல் என நோய் தாக்க ஆரம்பித்தது. இதனால் கடந்த 20 ஆண்டுகளில் மளமளவென பருத்தி சாகுபடி குறைய ஆரம்பித்தது. தற்போது மாவட்டத்தில் குறைந்தளவே பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளிடம் இருந்து பருத்தியை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், விவசாயிகள் நலனில் அன்றைய அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு பருத்தி விலை கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், பருத்தி சாகுபடி விவசாயிகள் புத்துயிர் பெற்றனர்.
பெரியகுளம் பகுதியில் பருத்தி சாகுபடி எருமலைநாயக்கன்பட்டியில் அதிகளவில் நடைபெறும். அங்கிருந்து கமிஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் பருத்திக்கு சராசரி விலையை விட 10 முதல் 25 சதவிகிதம் கூடுதல் விலை கிடைக்கும். கடந்த 2 வருடங்களாக தேனி பகுதியில் செயல்பட்டு வரும் நூல் மில்லிற்கு விவசாயிகள் நேரடியாக பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். சில நேரங்களில் பருத்தி விவசாயிகள் கமிஷன் கடை மற்றும் நூல் மில்லில் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நிரந்தர குறைந்த பட்ச ஆதாரவிலை பருத்திக்கு கிடைத்தால் மட்டுமே பருத்தி சாகுபடியினை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எருமலைநாயக்கன்பட்டி பருத்தி விவசாயி கருப்பசாமி கூறுகையில், ‘‘கடந்த 20 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு பருத்தி விலை கட்டுப்படியான விலையாக இருந்தது. ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடிக்கு உழவு, பார்போடுதல், பருத்திவிதை, நடவு, களையெடுப்பு, தொழு உரம் மற்றும் ரசாயன உரம், மருந்து தெளிப்பு என ரூ.40ஆயிரம் முதல் ரூ.60ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. அதிகளவில் செலவு செய்து பருத்தி மகசூலுக்கு வரும் போது கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்றால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. பெரியகுளம் பகுதியில் எருமலைநாயக்கன்பட்டியில் விளையும் பருத்திக்கு தனி மவுசுதான்.’’ என்றனர்.
இதுகுறித்து பருத்தி விவசாயிகள் கூறுகையில், ‘‘இப்பகுதி மண் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் ஆகும். தற்போது உள்ள தமிழக அரசு ஒவ்வொரு சாகுபடி விவசாயிகளின் குறைகளை கேட்டு, அதற்கு ஏற்றபடி அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து நோய் கட்டுப்படுத்துதல், விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள், விளையும் பொருட்களை சந்தைப்படுத்துதல் விவசாயிகளின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது. பழைய மாதிரி பருத்தி சாகுபடியினை அதிகப்படுத்த பெரியகுளம் பகுதியில் அரசு பருத்தி நேரடி கொள்முதல் தொடங்க வேண்டும். தற்போதைய விலைவாசிகளை கருத்தில் கொண்டு பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.150 வரை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பருத்தி சாகுபடி விவசாயிகள் பயனடைவார்கள்’’ என்றார்.
மழைக்காலத்தில் பருத்தி செடிகளை தாக்கும் வேர்புழுவை தடுப்பது எப்படி?
தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வயல்களில் கரைகள் மற்றும் இதர பகுதிகளில் புற்கள், செடிகள் முளைத்து அதன் மூலம் உற்பத்தியாகும் தத்துப்பூச்சி, பச்சை காய்புழு, அந்துப்பூச்சி, பச்சை கூண்வண்டு, இளஞ்சிவப்பு காய்புழு, புருட்டோனியா புழு ஆகிய சேதத்தை ஏற்படுத்தும். இவை பருத்தி செடியில் உள்ள பூ, பிஞ்சு, காய்களையே அதிகம் தாக்கி சேதப்படுத்தும். எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி இனகவர்ச்சி பொறி, வைரஸ் நுண்ணுயிர் மூலம் புழுக்களை கட்டுப்படுத்தும் முறை மற்றும் வேளாண் துறையினரின் உரிய ஆலோசனைப்படி பூச்சி மருந்துகளை தெளித்து கவனித்து பராமரிக்க வேண்டும்.
இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியதாவது, ‘மழைக்காலம் துவங்கி உள்ளதால் கூண்வண்டு, வேர்புழுக்களால் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை உடனடியாக வேருடன் புடுங்கி அப்புறப்படுத்தி நோய் பாதிப்புகளை குறைக்க வேண்டும். பருத்தி செடியிலுள்ள பூச்சிகளின் முட்டைகள், சிறியளவில் வளர்ந்த புழுக்கள், பாதிக்கப்பட்ட பூக்கள், காய்கள், செடிகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தியும் நோய் தாக்குதலை குறைக்கலாம். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரித்தால் பருத்தி விவசாயத்தில் அதிக லாபம் பெறலாம்’ என்றனர்.
விவசாயத்தைக் காக்கும் திமுக அரசு
தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன.
விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.