சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரை உலகப் புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரையை மேம்படுத்தி அழகுபடுத்தும் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
எழில்கொஞ்சும் மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கூட்டம், கடற்கரை மணலில் நடந்து, கடலில் கால் நனைத்தும், குளித்தும் உள்ளம் மகிழ்ந்து வீடு திரும்புவர். குழந்தைகள் மணலில் ஓடியாடி விளையாடுவர். காதல் ஜோடிகள் கடற்கரை மணலில் அமர்ந்து காதலுடன் சேர்ந்து கடல் அலையையும் ரசிப்பர். கடற்கரை மணலில் காலாற நடந்து, அப்படியே கடலில் போய் கால் நனைக்கவும், மணலில் அமர்ந்து கதை பேசவும் யாருக்குத்தான் ஆசை இருக்காது.
ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இது பெரும் கனவாகவே இருந்து வருகிறது. பெரும்பாலானவர்களால் மெரினா கடற்கரையின் நீண்ட மணற்பரப்பில் நடந்து செல்ல இயலாது. இதனால், மெரினா கடற்கரையில் கால் நனைப்பது என்பது அவர்களுக்கு எட்டாத கனியாகவே இருந்து வருகிறது. அலைகள் ஓய்வதில்லை என்பார்கள். அதுபோல், அனைவரும் கடலில் கால் நனைத்து விளையாடுவதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் மாற்றுத்திறனாளிகளின் மனதுக்குள் எழும் ஏக்க அலைகளும் ஓய்ந்தபாடில்லை.
இதனால், சென்னையில் உள்ள ஊனமுற்றோர் உரிமை இணையம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள், சாதாரண குழந்தைகளைப் போல, மாற்றுத் திறனாளி குழந்தைகளும் கடல் அலையை ரசிக்கவும், அலையில் கால்களை நனைத்து மகிழவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சியிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தன.
இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி, மாற்றுத்திறனாளிகளுக்காக பண்டிகை காலங்களில் மட்டும் மெரினா கடற்கரையில் தற்காலிக நடைபாதை அமைத்து வருகிறது. அதன்படி, கடற்கரை சாலையிலிருந்து கடல் வரைக்கும் இந்த தற்காலிக பாதை அமைக்கப்படும். இந்தப் பாதை வழியாக சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகள் கடல் வரை சென்று கடலில் கால் நனைக்க வழி செய்யப்படுகிறது.
அதேசமயம், இந்த பாதையை நிரந்தர பாதையாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிதான், உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை கொண்டு வந்தார். அவர் வழியில் வந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க சென்னை மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, ரூ.1.14 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்று, மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்த நடை பாதை அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வந்தது. இந்த பணியானது, முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலினே இதனை தொடங்கி வைக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை, சிறிய பணிதான் ஆனால், பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட. இதனை முதல்வர் ஸ்டாலினே தெரிவித்திருந்தார். மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம் எனவும் அவர் கூறியிருந்தார். எனவே, அவரே நேரில் கலந்து கொண்டு இந்த பாதையை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். மாற்றுத்திறனாளிகளின் பெருங்கனவு நனவாகட்டும்; கடல் அலைகள் ஓயாமல் இருந்தாலும், அவர்களது ஏக்க அலைகள் ஓயட்டும்.