மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என பாட்டிலில் எழுதி விற்கப்பட்டாலும் பலரும் அதனைத் தேடியே போகின்றனர். குடிப்பது முன்னொரு காலதில் பொழுதுபோக்காக இருந்த சூழல் மாறி தற்போது குடிப்பதே பொழுது முழுவதும் வேலை என்ற சூழலை சிலர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். டாஸ்மாக் திறந்ததும் முதல் ஆளாக சென்று டாஸ்மாக் மூடியதும் கடைசி ஆளாக வருபவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கின்றனர். அதேபோல் மது குடித்து அதனால் உயிரிழப்பவர்கள் ஒருபக்கம் என்றால் மதுவை குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி அதன் மூலம் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பவர்கள், கடுமையான விபத்துகளை சந்திப்பவர்கள் என மறுபக்கம்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி சாகசம் என்ற பெயரில் இளைஞர்கள் தாறுமாறாக வாகனம் ஓட்டுவது, தேவையில்லாமல் அதிக ஒலியில் ஹார்ன் அடிப்பது என இவர்களால் சாலையில் ஒழுங்காக செல்பவர்களுக்கும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. எனவே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 185ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில் காவல் துறை புதிய முறையை நள்ளிரவு முதல் அமல்படுத்தியுள்ளது. அதாவது மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணித்தால் வாகன சட்டம் 188ன் கீழ் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை தரப்பில், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை மேலும் கட்டுப்படுத்தும் எண்ணத்திலேயே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுள்ளது. மது குடித்துவிட்டு கார் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும்.
அதேபோல், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய்,தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய், ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், ரேஸிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய், பதிவு செய்யப்படாத வாகனங்களை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22