திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடஞ்சந்தூர் தாலுகா, வடமலை ஒன்றியத்தில் உள்ளது அய்யலூர். இப்பகுதி மலை சார்ந்த கிராமம் என்பதால் இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு ஆடு, மாடு, கோழிகள் தான் அதிகம் வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அய்யலூர், புத்தூர், கொம்பேரிப்பட்டி, வடமதுரை, தென்னம்பட்டி, மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் வளர்க்கக்கூடிய ஆடுகளை வாரந்தோறும் அய்யலூரில் நடைபெறும் சந்தைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், திருச்சி, மணப்பாறை, தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆடுகள் வாங்குவதற்கு வியாபாரிகள் வந்திருந்தனர். கடந்த வாரம் 10 கிலோ கொண்ட ஆடு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தீபாவளியை முன்னிட்டு இன்று 10 கிலோ கொண்ட ஆடு 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. மேலும் கோழிகளும் அதிகளவில் விற்பனையானாதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.