தேவையில்லாத பொருட்களை விற்றே கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாய் வருமானத்தை இந்திய ரயில்வே துறை ஈட்டியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்தியன் ரயில்வேயில் பலதரப்பட்ட தேவையில்லாத பொருட்கள் உருவாவது வழக்கம். அந்த பொருட்களையெல்லாம் ஏலத்தில் விற்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகையை வருமானமாக ரயில்வே துறை பெற்று வருகிறது.
அந்த வகையில், நடப்பு நிதியாண்டான 2022-23ல் செப்டம்பர் வரையிலான தேவையில்லாத பொருட்களான 3 லட்சத்து 93 ஆயிரத்து 421 மெட்ரிக் டன் எடை கொண்ட இரும்புகளை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விட்டிருக்கிறது இந்தியன் ரயில்வே.
இதன் மூலம் 2,582 கோடி ரூபாய் வருமானம் ரயில்வே துறைக்கு கிடைத்திருக்கிறது. இது கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் 28.91 சதவிகிதம் அதிகமாக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 2021-22 நிதியாண்டில் 3,60,732 மெட்ரிக் டன் தேவையில்லாத பொருட்களை விற்றபோது 2,003 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. நடப்பாண்டு 28.91% அதிகமாக கிடைத்த நிலையில், இந்த ஆண்டு முடிவடைவதற்குள் 4,400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது இந்தியன் ரயில்வே.
இந்த நிலையில், ரயில் கேஜ் மாற்றும் திட்டங்களின் போது ஸ்கிராப்கள் உருவாகும். அவற்றை ரயில்வே பாதைக்கான கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது போக தேவையில்லாத பொருட்களும் எஞ்சும். அந்த இரும்புகளை விற்றே இந்தியன் ரயில்வே வருவாய் ஈட்டுகிறது.
இப்படியாக தேவையில்லாத பொருட்களை வைத்தே கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் இந்தியன் ரயில்வே, ரயில் பயணிகளின் முகம் கோணாத வகையில் ரயில்வே துறையில் சில அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களர்கள் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கையாக இருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM