கடலூரில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்களின் காட்சிகள் பார்ப்போரை திகைக்க வைத்துள்ளது.
கடலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கழிவுநீர் வாய்க்கால்கள் பெரும்பாலும் சாக்கடைகள் அடைத்து மழை நீர் செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பருவமழை தொடங்கும் முன்பாக அடைப்புகளை சரி செய்யும் பணியில் தூய்மைப்பணியாளர்களை தற்போது மாநகராட்சி இறக்கிவிட்டுள்ளது. ஆனால் அதில் பணியாற்றும் பெரும்பாலான நபர்கள் கையுறை, கால் உறை, முக கவசம் என எதுவுமே இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே பலமுறை தமிழக அரசுக்கு இதுதொடர்பாக நீதிமன்றங்களும் `கழிவுகளை அப்புறப்படுத்தும் போது முறையான உபகரணங்களுடன் பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என அறிவுறித்தியுள்ளது. ஆனால் அவை பின்பற்றப்படாமல், எந்த விதமான உபகரணங்களும் இல்லாமல் சாக்கடை அள்ளும் பணியில் மாநகராட்சி பகுதியில் பணிகள் நடைபெறுவது சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
பொது இடங்களில் இருக்கும் கழிவுகளில் எது அபாயகரமான கழிவு, எது அபாயகரம் இல்லாத கழிவு என தற்போதைய நிலையில் தரம் பிரிக்கமுடியாது என்பதால், இதனால் என்ன ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.
நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் எச்சில் துப்ப வாய்ப்பு உள்ளது. அதன் மூலமாக கூட தொழிலாளர்களுக்கு நோய் பரவக்கூடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நீதிமன்றமும் தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தூய்மை பணியாளர்கள் முறையான உபகரணங்களுடன் பணியாற்ற அறிவுறுத்த வேண்டுமென்று சொல்லிவருகிறது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த பணிகள் நடைபெறுவது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM