வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய புயலுக்கு SITRANG என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 22 ஆம் தேதி காலையில் வலுப்பெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும்” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய புயலுக்கு ’SITRANG’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழை வருகிற 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் ஏற்படும் பட்சத்தில் அது ஆந்திரா, ஒடிசா நோக்கி நகர்ந்து நல்ல மழையை கொடுக்கும் என்றும், இதனால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் வருகிற 20 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “வங்கக் கடலில் உருவாகும் இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏதும் இருக்காது. மழைப்பொழிவை பொறுத்தமட்டில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது. அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 28 ஆம் தேதி ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுவே தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையின் துவக்கமாக இருக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
தற்போது நிலவும் இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் மழைபெய்யுமா? போட்டி நிறுத்தப்படுமா? நிபுணரின் கணிப்பு என்ன.? Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM