கேரளாவில் தனது விருப்பத்திற்கு எதிராக வேலைக்குச் சென்ற மனைவியை தாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட கொடூர கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் 27 வயதான இளைஞன் திலீப் தனது மனைவி ஆதிராவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆதிரா திலீப்பின் விருப்பத்திற்கு எதிராக வேலைக்குச் சென்றதால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தனது எதிர்ப்பையும் மீறி வேலைக்குச் சென்ற மனைவி ஆதிராவை திலீப் முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார். தாக்கியதோடு மட்டுமல்லாமல் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் திலீப்.
நெஞ்சை உறைய வைக்கும் அந்த வீடியோ காட்சிகளில் திலீப்பின் மனைவி ஆதிராவின் முகத்தில் இருந்து ரத்தம் வழியும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இணையத்தில் வைரலான அந்த வீடியோவில் திலீப் தனது மனைவியை கொடூரமாக தாக்கியதை ஒப்புக்கொள்ளும் காட்சிகளும் கடனை அடைப்பதற்காக வேலைக்குச் செல்வதாக அவரது மனைவி ஆதிரா கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. “கடனை அடைக்க வேலைக்குச் செல்கிறேன். திலீபேட்டன் வேலை செய்து காசு கொடுத்தால் நான் வேலைக்குப் போகமாட்டேன். நான் வீட்டில் உட்கார்ந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறிய ஆதிரா கணவனது தாக்குதலை தாங்க இயலாமல் கடைசியில் வேலையை விட்டு விலக சம்மதித்துள்ளார். திலீப் தனது மனைவி மீண்டும் வேலைக்குச் செல்ல மாட்டார் என்று கூறுவதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து திலீப்பின் மனைவி ஆதிரா மலையான்கீழ் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் திலீப் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள திலீப் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), 498 (A) (ஒரு பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர் அவளை கொடுமைப்படுத்துதல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக தண்டனை), 324 (அபாயகரமான ஆயுதங்களால் காயப்படுத்துதல்) மற்றும் 294 (B) (ஆபாசமான பாடல் அல்லது வார்த்தைகள் பாடுவது, ஓதுவது அல்லது உச்சரிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM