ஸ்மார்ட்போன் வாங்க ரத்தம் விற்க முயற்சி; அதிரவைத்த 12-ம் வகுப்பு சிறுமி!

மின்னணு தொழில்நுட்பங்கள் பெரும் வளர்ச்சியடைந்த இந்தக்காலத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிடித்திருக்கும் ஒன்றுதான் ஸ்மார்ட்போன். ஆனால் வசதிபடைத்தவர்களிடம் இலகுவாக சென்று சேரும் இந்த ஸ்மார்ட்போன், ஏழைகளுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது.

ஸ்மார்ட்போன்

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுமியொருவர், ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ரத்தத்தை விற்க முடிவுசெய்து மருத்துவமனைக்குச் சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

12-ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி, தெற்கு தினாஜ்பூரிலுள்ள தபன் காவல் நிலையப் பகுதியின் கர்தாவில் வசித்துவருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஆன்லைனில் ரூ.9,000 மதிப்புடைய ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அதற்கானப் பணத்தைச் சிறுமியால் ஏற்பாடு செய்யமுடியவில்லை. அதனால் தன்னுடைய ரத்தத்தை விற்க முடிவுசெய்த சிறுமி, நேராக பாலூர்காட்டிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

ரத்தம்!

அங்கு சிறுமியின் இந்தக் காரணத்தைக் கேட்ட மருத்துவமனை ஊழியர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக குழந்தை பராமரிப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து, அவர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து குழந்தை பராமரிப்பு உறுப்பினர் ரீட்டா மஹ்தோ செய்தியாளர்களிடம் , ​`​​​`போன் விரைவில் டெலிவரி செய்யப்படும் என்பதால் அதற்கான பணத்தைச் சேகரிக்கவே ரத்தத்தை விற்கும் முடிவுக்கு வந்ததாக, சிறுமி காரணம் கூறினார். நாங்கள் அவரை மீட்டு அவருக்கு ஆலோசனை வழங்கி அவர் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.