அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ்: முன்னாள் முதல்வர் எதிர்ப்பு!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, ஸ்ரீநகரில் உயர் பாதுகாப்பு மிகுந்த குப்கர் சாலைப் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். அவரது முகாம் அலுவலகமாகவும் அந்த இல்லம் செயல்பட்டு வருகிறது. தால் ஏரியை பார்த்த மாதிரி அமைந்துள்ள அந்த அரசு பங்களா மெஹபூபா முப்தியின் தந்தையும், முன்னாள் முதல்வருமான முப்தி முகமது சயீத்துக்கு 2005ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு பங்களாவை காலி செய்ய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “இது நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயம்தான். நான் தங்கியிருக்கும் அரசு பங்களா, ஜம்மு-காஷ்மீர் முதல்வருக்கானது என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பங்களா கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு எனது தந்தைக்கு ஒதுக்கப்பட்டது.” என விளக்கம் அளித்துள்ளார்.

நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் சரியானது அல்ல என சுட்டிக்காட்டியுள்ள மெஹபூபா முப்தி, இந்த நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக தனது சட்டக்குழுவுடன் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எஸ்டேட்ஸ் துறையின் துணை இயக்குநரால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜம்மு-காஷ்மீர் பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும், கோரிக்கை வைக்கும் பட்சத்தில் பாதுகாப்பு அல்லது பிற காரணங்களுக்காக மாற்று தங்குமிடத்தை வழங்க அரசு தயாராக இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு காரணங்கள் கருதி மெஹபூபா முப்திக்கு மாற்று தங்குமிடம் ஒதுக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் மோஹித் பட் கூறுகையில், “முப்தி முகமது சயீத் தனிப்பட்ட இல்லத்திற்கு செல்ல விரும்பியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக 2005இல் குப்கர் சாலையில் உள்ள வீடு அவருக்கு வழங்கப்பட்டது. முதல்வர் அல்லது முன்னாள் முதல்வர் சலுகைகளுடன் இந்த வீட்டுக்கு எந்த தொடர்பும் இல்லை. முற்றிலும் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாகவே அவருக்கு இந்த இல்லம் ஒதுக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.