தமிழகத்தில் பி.எஃப்.ஐ அமைப்பினர் மீதான ரெய்டு, கைது ஆகியவற்றை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்த அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு அமைதி நிலவி வரும் சூழலில், கோவை மாநகரில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பிருக்கும் சாலையில் மாருதி 800 காரில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தடய அறிவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். விபத்து ஏற்பட்ட பகுதியின் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கார் வெடித்து விபத்துக்குள்ளான இடத்தில் ஏ.டி.ஜி.பி தாமரை கண்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று காலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் மாருதி 800 காரில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
தடய அறிவியல் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் வந்து கொண்டிருக்கிறார். அவர் கார் சிலிண்டர் வெடித்த இடத்தை நேரில் பார்வையிடுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதிக்கு வந்த டிஜிபி அவர்கள், அப்பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். விபத்தின் பின்னணி குறித்து விரைவாக கண்டறிய அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.