ஜெருசலேம்,
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.
அதேவேளை, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமிலும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் பழைய நகரில் வடக்கு பகுதியில் 20 வயது இஸ்ரேலிய இளைஞர் மீது நேற்று பாலஸ்தீனியர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றார். கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இஸ்ரேலியர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பாலஸ்தீனியரை தீவிரமாக தேடி வந்தனர். கிழக்கு ஜெருசலேமின் ஷேக் ஹரக் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியரை இஸ்ரேல் பாதுகாப்புபடையினர் கைது செய்ய முற்பட்டனர். அப்போது, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.