டொராண்டோ,
டொராண்டோ தீவு விமான நிலையத்தின் படகு முனையத்திற்கு அருகே வெடிக்கக்கூடிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்ததையடுத்து விமானங்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
பில்லி பிஷப் விமான நிலையத்தின் மெயின்லேண்ட் படகு முனையத்தில் சந்தேகத்திற்குரிய லக்கேஜ் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை 4 மணிக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து வெடிக்கும் சாத்தியம் உள்ள பொருளை கையாண்டு வருவதாக டொராண்டோ போலீசார் டுவிட்டரில் தெரிவித்தனர். இதையடுத்து படகு முனையத்திற்கு அருகிலுள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடங்களில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் மற்றொரு குடியிருப்பு கட்டிடத்தில் குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் வெளியேற்றப்பட்டனர்.
வெடிக்கக்கூடிய பொருள் இருப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து விமானநிலையத்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். தொடர்ந்து விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டதாகவும், இரண்டு ஏர் கனடா விமானங்கள் ஒன்டாரியோ மற்றும் ஹாமில்டனுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் பல மணி நேரமாக டெர்மினலுக்குள் சிக்கித் தவித்த பயணிகள், தண்ணீர் டாக்சிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.