ஐப்பசி மாதம் தொடங்கியதுமே தீபாவளி குறித்த எதிர்பார்ப்பும் திட்டமிடலும் தொடக்கிவிடும். காரணம் தீபாவளி நம் மரபில் மிகவும் முக்கியமான பண்டிகை. அதை நினைத்ததுமே மனதில் ஒரு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தோன்றிவிடும். வழக்கத்தைவிட சீக்கிரம் எழுந்து பொழுது புலர்வதற்குள்ளாக நீராடி வழிபாடுகள் செய்வது தீபாவளியின் சிறப்பு. இருள் சூழ்ந்த வேளையில் பொழுது புலர்வதற்கு முன்பாகவே குளிர் காற்றும் சில வேளைகளில் லேசான தூறலும் இருக்கும்போதே எண்ணெயைத் தேய்த்துக் குளித்து மிதமான வெந்நீரில் நீராடும் சுகமே அலாதியானது. அதன்பின் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என்று அந்த நாள் களைகட்டத் தொடங்கிவிடும்.
இதில் தொடக்கமான அதிகாலை நீராடலே தீபாவளியின் சிறப்புகளில் ஒன்றும். எல்லா நாள்களும் பட்டாசு வெடிக்கலாம். புத்தாடை உடுத்தலாம். இனிப்புகள் உண்ணலாம். ஆனால் எல்லோரும் எங்கும் கங்கையில் நீராடிய பலனைப் பெற வேண்டுமானால் அது தீபாவளி நாளாக இருந்தால்தான் முடியும். அதனால்தான் அந்த நாளில் செய்யும் நீராடலை ‘கங்காஸ்நானம்’ என்று புனிதமாகச் சொல்வார்கள்.
அன்று எண்ணெய்யில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் யோகினிகளும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் ஆவாஹனமாகி அருள் பாலிப்பர் என்பது ஐதிகம்.
எண்ணெய் தேய்த்துக்குளிப்பது என்பது வெறும் சடங்கு அல்ல. அதில் பல சிறப்புகள் உண்டு. முதல்நாள் இரவே நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு சாம்பிராணி, விரலி மஞ்சள் ஒரு துண்டு, ஓமம் ஆகிய சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்துவிட வேண்டும். சிலர் காய்ந்த மிளகாய் சேர்ப்பதுண்டு. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு. இதில் நல்லெண்ணெயில் மகாலட்சுமியின் சாந்நித்தியம் அந்த நாளில் இருக்கும். சாம்பிராணி ராகுவுக்கு உரிய பொருள். விரலி மஞ்சள் குரு பகவானுக்குரியது. ஓமம் புதபகவானுக்குரியது. மிளகாய் செவ்வாய் பகவானுக்குரியது. இப்படி நவகிரகங்களுக்கும் ப்ரீதி அளிக்கும் விதத்தில் தீபாவளி அமைந்துள்ளது சிறப்பு.
எனவே தவறாமல் தீபாவளி நாளில் அதிகாலை எண்ணெய்க் குளியல் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஆண்டு தீபாவளி 24.10.22 அன்று கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளின் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளும் அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் நீராடுவது சிறப்பு.
தீபாவளி நாளிலேயே லட்சுமி குபேர பூஜை செய்யும் வழக்கமும் சிலருக்கு உண்டு. இந்த ஆண்டு 24.10.22 அன்று மாலை 6:53 – 8:16 வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கப்படும். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் இந்த ஆண்டு 25.10.22 அன்று காலை 7.45 முதல் 8.45 க்குள் பூஜைகளை முடித்துவிட வேண்டும். அதேபோன்று அமாவாசை தர்ப்பணம் செய்பவர்கள் பகல் 11 மணிக்குள் அதை முடித்துவிட வேண்டும். காரணம் அன்று மாலை சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. எனவே நம் கடமைகள் அனைத்தையும் அதற்கு ஆறு மணி நேரத்துக்கு முன்பாகவே முடித்துவிடுவது சிறப்பு.
சூரிய கிரகண காலத்தில் தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணிய காரியமாகக் கருதப்படுகிறது. சூரிய கிரகண வேளையில் செய்யும் ஜப வழிபாடுகள் மிகுந்த பலன்களைத் தரும். எனவே 25.10.22 அன்று மாலை 4.45 முதல் 5.45 வரை தர்ப்பணம் முதலிய சடங்குகளைச் செய்வது மிகவும் சிறப்பாகும்.