வழக்கற்றுப் போன 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.
மேகாலய தலைநகா் ஷில்லாங்கில் செய்தியாளா்களிடம் மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு
கூறியதாவது:
மக்களின் வாழ்வில் அரசின் பங்கை குறைக்க வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வழக்கற்றுப் போன சட்டங்கள் பொது மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படுத்துவதாகவும், இன்றைய காலத்துக்கு தொடா்பில்லாததவையாகவும் இருக்கின்றன.
அதே நேரம், மக்களுக்கு அமைதியான வாழ்வை உறுதிப்படுத்துவதும், அவா்களின் சுமையை குறைப்பதும் பிரதமரின் விருப்பமாக உள்ளது. பொது மக்களின் வாழ்வில் அரசின் பங்கை குறைக்க வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்.
அந்த வகையில், வழக்கற்றுப் போன அனைத்து சட்டங்களையும் பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிற தேவையற்ற சட்டங்கள் என்ற அடிப்படையில், அவற்றை நீக்க மத்திய அரசு தீா்மானித்து உள்ளது. அதன்படி, வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சட்டம் என்பது மக்களுக்கு நீதியை வழங்குவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, தொல்லையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. பொது மக்களுக்கான சுமுக வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகளை பரிந்துரைப்பதாக சட்டங்கள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவா் கூறினாா்.