பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை தியாகம் செய்யும் மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ள தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு வந்துள்ள பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை அப்பகுதி மக்கள்  தியாகம் செய்து வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தேர்த்தங்கல் கிராமத்தில்  சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு தற்போது கூழைக்கடா, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டு பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக வரத் தொடங்கி உள்ளன. 

இந்த நிலையில் இந்த பறவைகளை தேர்த்தங்கல் ஊராட்சி பகுதி மக்கள் தங்களின் செல்லப்பிள்ளைகளாக நினைத்து பாதுகாத்து அதற்கு சிறிதளவுகூட தொல்லை கொடுக்காமல் கட்டுப்பாட்டோடு இருந்து வருகின்றனர். பறவைகளின் ரீங்கார சத்தமே தங்களின் பட்டாசு சத்தம் என்று மனதால் மகிழ்ந்து இந்த பறவைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று இப்பகுதி கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தியாகம் செய்து வருகின்றனர்.

தங்கள் பகுதியை தேடி இனப்பெருக்கத்திற்காக நம்பிக்கையுடன் வரும் பறவைகளுக்கு பட்டாசு வெடி சத்தத்தினால் அச்ச உணர்வு ஏற்பட்டு பயத்தினால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் திரும்பி செல்லக்கூடாது என்பதற்காகவும், பறவைகள் முட்டைகள் அதிக வெடி சத்தத்தினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த தியாகத்தை செய்து வருவதாக ராமநாதபுரம் வனச்சரகர்  தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.