லண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் யார் யார் போட்டியிடப் போகின்றனர் என்பதில் குழப்பம் தொடர்கிறது. அதே நேரத்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனாக்குக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும்.
ஆதரவு
இதன்படி நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார்.
ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால், 45 நாட்கள் பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த வாரத்துக்குள் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்தத் தேர்தலில், கட்சியின் 1.70 லட்சம் பிரதிநிதிகள் ஓட்டளிக்க உள்ளனர்.
இதற்கு முன், நாளைக்குள் தலைவர் பதவிக்கு யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது இறுதி செய்யப்பட வேண்டும்.
ரிஷி சுனாக், போரிஸ் ஜான்சன் ஆகிய இருவரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால், இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், பெண் எம்.பி.,யான பென்னி மோர்டார்ட், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள போரிஸ் ஜான்சன், லண்டனுக்கு புறப்பட்டுள்ளார். அவருக்கு, கட்சியில் 45 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. ரிஷி சுனாக்குக்கு, 100 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
சமரசம்
இதற்கிடையே, ரிஷி சுனாக் மற்றும் போரிஸ் ஜான்சன் தங்களுக்குள் சமரசம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அமைச்சர் பதவியை ஏற்பதற்கு ரிஷி சுனாக் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
அதுபோல, ரிஷி சுனாக் பிரதமராக பதவியேற்று, அவருடைய அமைச்சரவையில் இணைவதற்கு போரிஸ் ஜான்சனும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
தலைவர் பதவிக்கான தேர்தலில், இவர்கள் போட்டியிடுவரா என்பதில் எந்த உறுதியான தகவலும் இல்லை. இதனால், பழமைவாத கட்சியில் குழப்பம் நீடிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்