தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பலரும் சொந்த ஊர் செல்ல விமான சேவையை நாடி வருகின்றனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கேற்ப, கட்டணமும் 3 மடங்கு உயர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்கவில்லை. இது தவிர, கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும் பலர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். டிக்கெட் கிடைக்காத பலரும் தற்போது விமான சேவையை நாடி வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
அதேநேரம், விமானங்களில் பயணக் கட்டணமும் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து டெல்லிக்கு வழக்கமான கட்டணம் ரூ 6,000. தற்போது இது ரூ.12,000 முதல் ரூ18,000 வரை அதிகரித்துள்ளது. கொல்கத்தாவுக்கு கட்டணம் ரூ.6,500. தற்போது ரூ.17,000 வரை அதிகரித்துள்ளது. திருவனந்தபுரத் துக்கான கட்டணம் ரூ.5,000. இது ரூ.21,000 வரை அதிகரித்துள்ளது.
சென்னை – மதுரைக்கு ரூ.4,200 கட்டணம், ரூ.12 ஆயிரமாகவும் திருச்சிக்கு ரூ.3,500-ல் இருந்து ரூ.11,500 வரையும் தூத்துக்குடிக்கு ரூ.4,500 தற்போது ரூ.11,500 ஆகவும் சென்னை – கோவைக்கு ரூ.3,500-ஆக இருந்தது ரூ.11,500 வரையும் உயர்ந்துள்ளது.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “பண்டிகை நாட்களில் வெளியூர் செல்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. விமானங்களில் குறைந்த கட்டண டிக்கெட்கள் அனைத்தும் காலியாகி விடுவதால், அதிக கட்டண டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன. முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்தால், அதிக கட்டணத்தை தவிர்த்து, வழக்கமான குறைந்த கட்டணத்திலேயே பயணம் செய்யலாம்’’ என்றனர்.