மெல்போர்ன்,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூப்பர் 12 சுற்று
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சூப்பர்12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை மெல்போர்னில் எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டிக்காக இரு அணியினரும் மெல்போர்னில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
வலுவான இந்திய அணி
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு உலக கோப்பை போட்டிக்காக முன்கூட்டியே ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்தியதுடன், பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என்று பெரும் பட்டாளமே இருக்கிறது. சூர்யகுமார் அபார பார்மில் இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது பின்னடைவு என்றாலும் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அந்த இடத்தை நேர்த்தியாக நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்கும், சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், அக்ஷர் பட்டேலும் நல்ல நிலையில் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முதல் தடையை இந்திய அணி வெற்றிகரமாக கடந்து விட்டால் அதன் பிறகு அரைஇறுதியை எட்டுவது என்பது எளிதாகி விடும். கடந்த உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை விரைவில் வீழ்த்தியது பாதகமாக அமைந்தது. எனவே இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.
மழை மிரட்டல்
பலம் வாய்ந்த அணியான பாகிஸ்தானை எளிதில் கணிக்க முடியாது. பேட்டிங்கில் கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஷான் மசூத் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஷதப்கான் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள். பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் நிலைத்து நின்று விட்டால் பவுலர்களுக்கு தலைவலியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் அதிரடியாக விற்று தீர்ந்து விட்டன. போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில் வருணபகவான் வழிவிடுவாரா? என்பது பலத்த கேள்விக்குறியாக இருக்கிறது. மெல்போர்னில் இன்று 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையால் போட்டி ரத்தாகலாம் அல்லது குறைந்த ஓவர் கொண்டதாக நடத்தப்படலாம்.
பதிலடி கொடுக்குமா?
உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகள் இடையிலான மோதலில் இந்தியாவின் கையே மேலோங்கி இருக்கிறது. 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் 7 முறையும் இந்திய அணியே பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் 6 முறை மோதியதில் இந்தியா 5 முறை வெற்றி கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தி ஒரே ஒரு வெற்றியை கண்டுள்ளது. அத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.
இதனால் பாகிஸ்தான் அணி முந்தைய போட்டியில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் கடந்த உலக கோப்பையில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி வரிந்து கட்டும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்று எளிதில் சொல்ல முடியாது. அதேநேரத்தில் நெருக்கடியை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனலாம்.
பிற்பகல் 1.30 மணிக்கு…
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் அல்லது முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் அல்லதுஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.
பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, இப்திகர் அகமது, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஷதப் கான், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்,
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
மற்றொரு ஆட்டம்
ஹோபர்ட்டில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் (காலை 9.30 மணி) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்திக்கிறது. இங்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு நேருக்கு நேர் சந்தித்த இரு ஆட்டங்களிலும் இலங்கை அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மைதான கண்ணோட்டம்
உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டதாகும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சமஅளவில் கைகொடுக்கும் இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும். இந்த மைதானத்தில் இதுவரை 15 சர்வதேச 20 ஓவர் போட்டிகள் அரங்கேறி இருக்கின்றன. இங்கு இந்திய அணி 4 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. பாகிஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் ஆடி அதில் தோல்வி அடைந்தது.