தமிழகத்தில் இன்று தீபாவளி திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிக்கிறோமோ? இல்லையோ? கறி சோறு கட்டாயம் போட்டே ஆக வேண்டும் என்று இளசுகள் கண்டிஷன் போட்டு விடுவதை பார்க்க முடிகிறது. அதன்பிறகு பட்டாசு வெடிக்கிறதுக்கும் இதேபோல் கண்டிஷன் போட்டு கடுப்பாக்கி விடுவர். இதையொட்டி அதிகாலை நேரத்திலேயே பெற்றோர்கள் கறிக்கடைக்கு புறப்பட்டு விடுவர். முதல் வேலையாக கறி வாங்கி வந்து வைத்து விட்டு தான் அடுத்த விஷயங்களை பார்ப்பர்.
அந்த வகையில் கறிக் கடைக்காரர்களுக்கு இன்றைய தினம் நல்ல வசூல் வேட்டை என்பதில் சந்தேகமில்லை. கோழி, ஆடு, மாடு, பன்றி, மீன் மற்றும் கடல் உணவுகள் என பலவிதமான கறிகள் விற்பனையில் படுஜோராக இருந்திருக்கும். இதனால் கறிக்கடைகள் முன்பு நீண்ட தூரத்திற்கு வரிசை செல்வதை தவிர்க்க முடியாது. தமிழகத்தில் ஏற்கனவே பீஃப் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான பதிவுகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் இருந்து திடீரென தீபாவளி_கறிநாள் என்ற ஹேஷ்டேக் வைரலாக தொடங்கியுள்ளது. ஆமா, இப்ப எதுக்கு இந்த ஹேஷ்டேக் ஓடிட்டு இருக்கு? என்று கேட்கும் அளவிற்கு பதிவுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். அதிலும் சில பதிவுகளை பார்க்கும் போது மிகவும் ரசிக்க வைக்கின்றன. ”காலை இட்லி, மிக்சிங் குழம்பு, டிவியில் பட்டிமன்றம், மதியம் மட்டன் என சூப்பர் காம்பினேஷன்” உடன் தீபாவளி களைகட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தல தீபாவளியை வைத்து கலாய்த்து வருகின்றனர். ”ஆமா, உனக்கு தான் இன்னும் கல்யாணமே ஆகலையே? அப்புறம் எப்படி தல தீபாவளி மாப்ளே? அட நீ வேற. கறி கடைக்கு போனேன் தல மட்டும் தான் இருந்துச்சு. அதான்” என்று நக்கல் நையாண்டிகளை தெறிக்க விட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மன்னன் படத்தில் தியேட்டரில் நடிகர் ரஜினி டிக்கெட் வாங்கும் காட்சி மிகவும் பிரபலம்.
அதில் சட்டை கிழிந்து கண்ணாடி உடைந்த நிலையில் டிக்கெட் உடன் வெளியே வருவார். அப்போது கவுண்டமணி கேட்கும் போது கண்ணாடி போனா போகுது. டிக்கெட் கிடைச்சுடுச்சு என்பார். அந்த புகைப்படத்தை வைத்து, ”சட்ட கிழியுற அளவுக்கா பட்டாசு வெடிப்ப எனக் கேட்கின்றனர். அதற்கு, பட்டாசா? கறி கடைக்கு போய்ட்டு வரேன்பா. அதுவும் பீஃப் கடைக்கு” என்று கூறி இணையத்தை பற்ற வைத்து வருகின்றனர்.
இதில் ஆல்டைம் பேவரைட் நடிகர் வடிவேலுவையும் நெட்டிசன்கள் விடவில்லை. நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வகையில் ஊத்தப்பம் கேட்கும் காமெடி புகைப்படத்தை பதிவிட்டு, ”அண்ணே தோலை உறிச்சிட்டு ஒரு கிலோ போடுங்க. நெஞ்சு கறி, லெக் பீசா போடுங்க. ஈரல் வேண்டாம் என்று வாடிக்கையாளர் கேட்கிறார். அதற்கு தம்பிக்கு ஒரு கிலோ போடு” என்று அசால்டாக கறிக் கடைக்காரர் கூறிவிட்டு செல்கிறார்.