பெரம்பலூர் நான்கு ரோடு அருகே தனியாருக்குச் சொந்தமான கார் உதிரி பாகங்கள் விற்பனை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் வீல் அலைன்மென்ட் மற்றும் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் மையத்தை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை இளையராஜா விற்பனை மையத்தை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்திற்கு பின்னர் விற்பனை மையத்திலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர். ஆனால், தீயை அணைக்க முடியாததால் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கார் உதிரி பாகங்கள், டயர்கள், கார் அலைன்மென்ட் செய்ய பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த மினி வேன் உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM