ஸ்ரீநகர்: எல்லை பகுதிகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு எல்லைப் பகுதிகளுக்குச் சென்று தீபாவளியை கொண்டாடினர். ஸ்ரீநகர், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு சியாச்சின் பகுதியிலும், 2015இல் பஞ்சாப் எல்லையிலும், 2016இல் இமாச்சலபிரதேச எல்லையிலும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். 2017இல் ஜம்மு-காஷ்மீர் எல்லையிலும், 2018இல் உத்தரகாண்டிலும், 2019இல் ஜம்மு-காஷ்மீரிலும் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார். இந்த ஆண்டு கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
இந்த நிலையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்ட ராணுவ தலைமை அதிகாரிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக வெவ்வேறு எல்லைப் பகுதிகளுக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினர். முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினர். அதைபோல், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே சிக்கிம் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். அவர்கள் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.