“கலை இயக்குநர் சந்தானம்;குறைந்த பட்ஜெட் செட்களால் பிரமிக்க வைப்பார்" – கலங்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

`காவியத் தலைவன்’, `ஆயிரத்தில் ஒருவன்’, `சர்கார்’, `தர்பார்’ உள்பட பல படங்களில் கலை இயக்குநராக கவனம் ஈர்த்தவர் T.சந்தானம். கடந்த ஞாயிறன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சந்தானத்தின் நினைவலைகளை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

“என்னோட `சர்கார்’, `தர்பார்’ ரெண்டு படங்கள்லையும் சந்தானம் ஒர்க் பண்ணியிருக்கார். ரொம்ப கிரியேட்டிவானவர். ஒண்ணொன்னையுமே பாத்துப் பாத்து இழைப்பார். பொதுவாகவே ஆர்ட் டைரக்டர்கள், ஒரு செட் ஒர்க் போட்டு முடிச்சதும், கிளம்பிடுவாங்க. படப்பிடிப்பு நடக்கறப்ப ஸ்பாட்டுல இருக்க மாட்டாங்க. வேற படத்துல ஒர்க் பண்ணக் கிளம்பிடுவாங்க. உதாரணமா, ஒரு பாடலுக்கு செட் போட்டால், அதுக்கடுத்த ஐந்து நாட்கள் வரமாட்டாங்க. சில பேர், காலையில ஆறு மணிக்கு நாம ஃபர்ஸ்ட் ஷாட் வச்சதும், கிளம்பிப் போயிடுவாங்க.

‘தர்பார்’ படத்தில்..

எனக்கு ஸ்பாட்டுல வேற எதாவது ஒரு ஆங்கிள் தேவைப்படும்போது, புதுசா எதாவது ஒண்ணு தேவைப்படும். அதை ரெடி பண்ணனும் சொல்றப்ப, அங்கே ஆர்ட் அசிஸ்டென்ட்கள்தான் இருப்பாங்க. ஸோ, `சர்கார்’ படத்துக்கு சந்தானம் சார் வரும் போதே, ஸ்பாட்லேயும் நீங்க இருக்கணும்னு கேட்டுக்கிட்டேன். அவரும் ஒருநாள் கூட வராமல் இருந்ததில்ல. எல்லா நாட்களும் ஷூட்டிங் வந்திருந்தார்.

அவருடைய ஒர்க்கும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். `சிம்டாங்காரன்’ பாடல்ல குறைந்த பட்ஜெட்ல கடற்கரை முழுவதையுமே அவர் தன் செட்களால் பிரமாண்டமாக்கியிருந்தார். பீச்ல ஒரு கப்பலே கொண்டு வந்திருந்தார்.

அதைப் போல `தர்பார்’லேயும் மும்பையில முழுக்கவே எங்களோடு இருந்தார். அதுல ஜெயில் செட்டப், போலீஸ் ஸ்டேஷன்னு எல்லாமே கதைக்கான விஷயங்களாக கவனத்துல எடுத்து பண்ணியிருப்பார். இப்ப நான் தயாரிக்கற `1947′ படத்துக்கும் அவர்தான் ஆர்ட் டைரக்டர். அது ஒரு பீரியட் ஃபிலிம்னால, அந்த காலகட்டத்துக்கான ஒரு கிராமத்தையே உருவாக்கியிருந்தார்.

தர்பார் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியுடன் சந்தானம்

அவர்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயங்கள் நிறைய இருக்கு. குறைந்த செலவில் பிரமாண்டங்களைக் கொடுப்பார். இன்னொன்னு, அவர் ரொம்ப நேர்மையா இருந்துருக்கார். அதனாலதான் அவரால கம்மி பட்ஜெட்ல கூட பிரமிக்க வைக்க முடிஞ்சது. அவரோடு இழப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல. எங்களுக்கும் பெரிய இழப்புதான். துயரில் இருந்து நான் மட்டுமல்ல, என் உதவியாளர்களும் மீண்டு வரமுடியல.

ஏன்னா, அவர் என்கிட்ட பழகின மாதிரியே என் உதவி இயக்குநர்கள்கிட்டேயும் நெருக்கமா பழகுவார். அவர் இறப்பு செய்தி கேட்டதும், என் அசிஸ்டென்ட்ஸ் ஒரு விஷயம் சொன்னாங்க. அவங்ககிட்ட அவர் `உங்களோட முதல் படத்துல நான்தான் ஒர்க் பண்ணுவேன். உங்க ரெண்டாவது படத்தை வேற யாரை வேணாலும் வச்சு பண்ணிக்கங்க..’னு உரிமையோடு சொல்லியிருக்கறதாக சொன்னாங்க. அவர் இறந்த செய்தி கேட்டு, என் உதவி இயக்குநர்கள் பலரும் இப்பவும் கண்கலங்குறாங்க. எதிர்பார்க்க முடியாத ஒரு அதிர்ச்சியா இருக்கு” – என கண்கலங்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.