சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு துர்க் என்ற இடத்தில் நடைபெற்ற கவுரி – கவுரா எனும் பூஜையில் சவுக்கடி அளிக்கப்பட்டது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆண்டுதோறும் கவுரி – கவுரா எனும் பூஜை சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், சவுக்கால் அடிக்கும் சடங்கு ஒன்றும் நடத்தப்படுகிறது. துர்க் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பங்கேற்றார். அவருக்கு சவுக்கடி அளிக்கப்பட்டது.
இந்த சவுக்கு சொந்தா என அழைக்கப்படுகிறது. குஷ் எனப்படும் ஒரு வகை புற்களை கொண்டு இந்த சவுக்கு தயாரிக்கப்படுகிறது. இதன்படி, நபர் ஒருவர் சவுக்கை கொண்டு பாகலின் வலது கையில் ஓங்கி வேகமுடன் அடிக்கிறார். அந்த அடியை அவர் பொறுமையாக ஏற்று கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது, மேளதாளங்கள் உள்ளிட்ட இசைக் கருவிகளும் பின்னணியில் இசைக்கப்பட்டன.
இந்த பாரம்பரிய வழக்கத்தின்படி, சவுக்கடி பெறுபவர்களுக்கு ஆசியும், வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சத்தீஷ்கரின் வளம் மற்றும் நலத்திற்காக இந்த பாரம்பரிய சடங்கில் முதல்வர் பூபேஷ் பாகல் கலந்து கொண்டுள்ளார்.