சூரிய கிரகணம் இன்று மாலை நாடு முழுவதும் தென்படுகிறது.; இதை வெறும் கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிரகணத்தை காண பிர்லா கோலரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது.
இன்று மாலை 4 மணிக்கு சூரியகிரகணம் நிகழவுள்ளது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை காணலாம். உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 மணிக்கு தொடங்கி 18:32 மணிக்கு முடியும். ரஷ்ய நாட்டின் மத்திய பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.
சென்னையில் மாலை 5.13 முதல் 5.45 வரை தோன்றும். இந்த சூரிய கிரகணம் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், பூனே ஆகிய இடங்களில் தென்படும். இது நடப்பாண்டிற்கான கடைசி சூரிய கிரகணமாகும்.மீண்டும் ஆகஸ்ட் 2 2027ஆம் ஆண்டு இதே போன்ற சூரிய கிரகணத்தை காணலாம்.