புதுடெல்லி,
இந்தியாவில் தீபாவளி பண்டிகை 2 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது. மக்கள் கோலங்களை இட்டும், புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், பலகாரங்களை உண்டும் பண்டிகையை கொண்டாடினார்கள். இதேபோன்று, உலகமெங்கிலும் வசித்து வரும் இந்தியர்களும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த ஆண்டு டெல்லி அரசு தடை விதித்து உள்ளது. ஒட்டுமொத்த பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் கூட விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் தீபாவளியன்று பல்வேறு இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன.
இதுபற்றி டெல்லி தீயணைப்பு துறையின் இயக்குனர் அதுல் கார்க் கூறும்போது, டெல்லியில் நேற்று தீபாவளி பண்டிகையின்போது, தீ விபத்து சம்பவங்கள் பற்றி 201 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன என கூறியுள்ளார்.
பண்டிகையை முன்னிட்டு, உயர்ந்த கட்டிடங்களுக்கும் சென்று தீயை அணைக்கும் வகையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தவும் தயார் நிலையில் தீயணைப்பு துறை உள்ளது என அவர் முன்பு கூறினார். இதன்படி, நெருக்கடி நிறைந்த பகுதிகளில் அதுபோன்ற தீ விபத்து சம்பவங்களை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.