வதந்திகளும், பொய்ச் செய்திகளும் பரப்பப்படும் கிடங்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் அதே வேளையில் அந்த சமூக வலைதள செயலிகள் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலம் ஆனவர்களும் இருக்கிறார்கள்.
இதேபோல, பல ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட, தொடர்பிலேயே இல்லாதவர்களை கண்டுபிடிக்க சமூக வலைதளங்கள் முக்கிய காரணியாக இருக்கின்றன. அதன்படி பல செய்திகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படி இருக்கையில், இரண்டாம் உலகப்போரின் போது பிரிந்த கடற்படையில் இருந்த நண்பர்கள் இருவர் 75 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டு பலரையும் நெகிழவும் உணர்ச்சிவசப்படவும் வைத்திருக்கிறது.
View this post on Instagram
A post shared by Erin Shaw (@mserinshaw)
அதன்படி எரின் ஷா என்ற இன்ஸ்டா பயனர் ஒருவர் தனது 96 வயது தாத்தா 75 ஆண்டுகள் கழித்து தன்னுடைய நண்பரை சந்தித்து அளவளாவிய காட்சியை பகிர்ந்து “நட்பும் அன்பும் எதையும் தாங்கும்” எனக் கேப்ஷன் இட்டு அவர்கள் சந்தித்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில், “கடற்படையில் பணியாற்றிய என்னுடைய 96 வயதான தாத்தா, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பிரிந்து, 75 ஆண்டுகள் கழித்து தன்னுடைய உற்ற நண்பரை சந்தித்தார். ஒகினாவாவுக்கு அனுப்பப்பட்ட பிறகு என்னுடைய தாத்தாவும் அவரது நண்பரும் பிரிந்தார்கள். போரில் இருந்த சமயத்தில் மற்றவர்கள் உயிர் பிழைத்தார்களா இல்லையா என்பதை இதற்கு முன்பு அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில்தான் தாத்தாவின் நண்பர் குடும்பத்தினரின் சமூக வலைதள பக்கம் மூலம் அவரை கண்டறிய முடிந்தது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ இதுவரை 26 ஆயிரத்துக்கும் மேலானோர் கண்டு நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM