லக்னோவில் வீட்டை விட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட 13 வயது சிறுமி: அரசு விருந்தினர் மாளிகை அருகில் படுகாயங்களுடன் மீட்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை வீட்டை விட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் உடலில் பல இடங்களில் படுகாயங்களுடன் விழுந்து கிடக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூகவலை தளங்களில் வெளியாகி உள்ளது.

25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் சிறுமி ரத்தக்காயங்களுடன் இருக்கும் கைகளை நீட்டி தன்னைச் சுற்றி இருக்கும் கூட்டத்தை நோக்கி உதவி கேட்கிறார். ஆனால் சிறுமியைச் சுற்றி நிற்கும் ஆண்கள் அவளுக்கு உதவுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் தங்களின் செல்போனில் சிறுமியை படம் எடுப்பதில் மட்டுமே குறியாய் இருக்கின்றனர்.

இடையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதா? என்றும், போலீஸ் உயர் அதிகாரியின் எண் என்ன என்றும் சிலர் விசாரிக்கின்றனர். ஆனாலும் சிறுமிக்கு உதவ யாரும் முன்வரவில்லை தொடர்ந்து வீடியோ எடுப்பதிலேயே குறியாக உள்ளனர்.அந்த இடத்திற்கு போலீசார் வந்து சேரும் வரையில் சிறுமிக்கு யாரும் உதவவில்லை.

போலீஸ்காரர் ஒருவர் சிறுமியை தனது கைகளில் தூக்கிக் கொண்டு ஆட்டோவை நோக்கி ஓடுகிறார். படுகாயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமி ஒருவரை உள்ளூர் போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஞாயிற்றுகிழமை வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அரசு விருந்தினர் மாளிகை அருகே சிறுமி ஒருவர் வலியால் துடிப்பதைப் பார்த்த விருந்தினர் மாளிகை காவலாளி உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அந்தச் சிறுமியுடன் இளைஞர் ஒருவரும் வந்தது விருந்தினர் மாளிகை கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த இளைஞர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. மருத்துவர்களின் அறிக்கைக்கு பின்னரே அது உறுதி செய்யப்படும்’ சிறுமி மேல் சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.