உலகின் பல இடங்களில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சுமார் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக சேவை முடங்கியதால், தகவல்களை பரிமாற்றம் செய்யமுடியாமல், வாட்ஸ்அப் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், தங்களது செல்போன்களில் வாட்ஸ் அப் செயலி செயல்படவில்லை என்று பயனாளர்கள் புகார் தெரிவித்தனர். #whatsappdown என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
வாட்ஸ்அப் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பயனாளர்கள் தகவலை பரிமாறி வந்தனர். இதுகுறித்து மெட்டா நிறுவனம் அளித்த விளக்கத்தில், “வாட்ஸ்அப்-இல் குறுஞ்செய்திகள் அனுப்புவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம்; வாட்ஸ் அப்பை விரைவில் மீட்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சேவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த இரண்டு மணி நேரமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது பயனாளர்களை நிம்மதியடையச் செய்துள்ளது.