கலிபோர்னியா: உலக அளவில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் முடங்கியது. இது தொடர்பாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வாட்ஸ்அப் மெசேஞ்சரை பயன்படுத்தி பயனர்களால் தகவல் பரிமாற முடியாமல் தவித்தனர்.
பயனர்களும் இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் வேடிக்கையாக மீம் பதிவிட்டு வருகின்றனர் என்பதையும் பார்க்க முடிகிறது.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப் தளத்தின் பணி மிகவும் முக்கியமானது. அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் தனிப்பட்ட ரீதியாக பலரும் எளிய வழியில் தொடர்பு கொள்ள உதவுகிறது இந்த தளம். இப்போது இதன் சேவை முடங்கி உள்ளது உலகமே முடங்கியதை போல உள்ளது. ஒருவருக்கு ஒருவர் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முடங்கப்பட்ட தளங்கள் குறித்த தகவலை வெளியிடும் டவுன்டிட்டக்டர் தளத்தில் மெசேஜ் அனுப்பவும், சர்வர் இணைப்பு மற்றும் செயலி இயங்கவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. வாட்ஸ்அப் தரப்பில் இது தொடர்பாக இன்னும் அப்டேட் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இது தொழில்நுட்ப கோளாறு என இப்போதைக்கு தெரிகிறது.