ஸ்ரீநகர்: 76-வது காலாட்படை தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:
பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் மக்களுக்கு எதிராக அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. இந்தியாவை குறி வைப்பதே தீவிரவாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது.
அரசியலைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீரில் மக்களுக்கு எதிரான பாகுபாடு முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசால் பாகுபாடு முடிவுக்கு வந்துள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27-ம் தேதி, இந்திய ராணுவம் சார்பில் காலாட்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1947-ம் ஆண்டு இதே நாளில் இந்திய ராணுவத்தின் முதல் சீக்கியர் படைப்பரிவு, ஸ்ரீநகரில் உள்ள விமான தளத்தில் தரையிறங்கி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பாகிஸ்தான் படையினரை விரட்டியது. சுதந்திர இந்தியாவில் ராணுவம் மேற்கொண்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.