டெல்லி: தலைநகர் டெல்லியில் யமுனை ஆற்றில் பொங்கிவரும் மாசுபட்ட நுரையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு வட இந்தியாவில் 4 நாட்கள் நடைபெறும் சத் பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். சத் பூஜையை முன்னிட்டு பல்வேறு நதிகளிலும் பக்தர்கள் புனித நீராடுவார்கள். அவ்வகையில் டெல்லியில், தொழிற்சாலை கழிவுகளும், சாக்கடை கழிவுநீரும் கலந்து மிகவும் மாசடைந்த நிலையில் நுரை பொங்க ஓடி கொண்டிருக்கும் யமுனை நதியிலும் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
புனித நதியாக கருதப்படும் யமுனை நீரில் அமோனியா உள்ளிட்ட ரசாயன கழிவுகள் அதிகளவில் கலந்திருப்பதால் அதில் நீராடுபவர்களுக்கு தோல் அரிப்பு, வயிறு தொந்தரவு மட்டுமல்லாமல் புற்றுநோய் ஆபத்தும் உண்டு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் இவற்றை பொருட்படுத்தாத பக்தர்கள் யமுனையில் ஆண்டுதோறும் புனித நீராடி வருகின்றனர். யமுனை நதியில் திருமணமான பெண்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு சூரியனை நோக்கி மந்திர ஜெபங்களை செய்வது குடும்பத்திற்கு நல்லது என நம்பப்படுவதால் ரசாயனம் கலந்த கழிவு நீரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் நீராடுகின்றனர்.
இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது, யமுனை ஆறு மிகவும் மாசுபட்டுள்ளது என்று எங்களுக்கு தெரியும். ஆனால் யமுனைத் தாயை வேண்டிக் கொண்டு இதில் இறங்குகிறோம். இதில் குளிப்பதால் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம் என்றார். மற்றொரு பக்தர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக சத் பூஜையில் பங்கேற்க, இந்த யமுனை ஆற்றில் குளிக்கிறேன். என் உடம்பு முழுக்க அரிப்பு ஏற்படுகிறது. ஆனால், என்ன செய்வது? சத் பூஜைக்காக குளித்துதானே ஆக வேண்டும். தொடர்ச்சியாக 10 நாட்கள் குளிக்க வேண்டுமே என்றார்.