நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் படம், பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
இதுபற்றி தயாரிப்பாளர் போனி கபூர் போட்டிருக்கும் ட்வீட்டின்படி, இப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு விநியொகத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸூம், தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் பெற்றிருக்கிறது.
2023 பொங்கலுக்கு, நடிகர் அஜித்தின் துணிவு படம் மட்டுமன்றி இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வாரிசு படத்தில், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் வியாபார பணிகளை தயாரிப்பாளர் தில் ராஜு தொடங்கினார்.
வாரிசு படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எஸ்.லலித் குமார் வாங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் ‘தளபதி 67’ படத்தையும் இவரே தயாரிக்கவிருக்கிறார். மாஸ்டர், வாரிசு மற்றும் தளபதி 67 என விஜய்யின் அடுத்தடுத்த மூன்று படங்களிலும் செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.
ஆக, இந்த பொங்கலுக்கு விஜய் – அஜித் படங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது, கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. கடைசியாக ஜில்லா – வீரம் படங்கள் ஒரேநேரத்தில் ரிலீஸ் ஆகின. அதற்குப்பிறகு இப்போதுதான் இரண்டு பேரின் படங்களும் ஒன்றாக ரிலீஸாகிறது. இதையடுத்து இருவரின் ரசிகர்களும் உற்சாகமாகியுள்ளனர்.