நம்ம சென்னை செயலியை பயன்படுத்தி மாநகராட்சியால் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் பெற்று பயனடையுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொழில்வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் மற்றும் நிகழ்நிலையில் கட்டிட திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல் போன்ற சேவைகளும் ‘நம்ம சென்னை’ செயலியில் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘நம்ம சென்னை’ செயலி 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் உபயோகிப்பாளர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியில் 94 வகையான புகார்கள் 12 குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 838 புகார்கள் பெறப்பட்டு, நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 9499933644 என்ற ‘வாட்ஸ் அப்’ எண் மூலம் புகார்களை தெரிவிக்கவும், பதிவு செய்யப்பட்ட புகார்களின் நிலையினை அறியவும், ‘ஆன்லைன்’ சேவைகளான பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சொத்து வரி செலுத்துதல், தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் அட்டவணை, கட்டிட திட்ட ஒப்புதல், பிற ‘ஆன்லைன்’ சேவைகள், முக்கிய உதவி எண்கள் பெறுதல் ஆகியவை வழங்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களின் நலனுக்காக, இந்த வாட்ஸ் அப் எண்ணில் தற்போதுள்ள சேவைகளுடன் வர்த்தக உரிமம் புதுப்பித்தல், நிறுவன வரி செலுத்துதல் மற்றும் கட்டிட திட்ட விண்ணப்பத்தின் நிலையை நிகழ்நிலை மூலம் அறிதல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றது. எனவே, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் 9499933644 என்ற வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தி மாநகராட்சியின் சேவைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.