தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விதித்த இயற்கை புகையிலையை விற்பனை தடையை நீக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
பான் பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது போல் இயற்கை புகையிலை விற்பனைக்கு தடை விதித்து தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தடையை நீக்க வேண்டும் என இயற்கை புகையிலை விற்பனையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்ய தடை இல்லை. விவசாயிகளிடம் புகையிலை செடியின் இலைகளை பெற்று, வெல்லம் கலந்த நீர் தெளித்து எந்த வேதியியல் பொருட்களையும் சேர்க்காமல் விற்பனை செய்யலாம்.
இயற்கை புகையிலையில் நிகோடின் என்ற வேதிய பொருள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனாலும் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மது விற்பனையில் ஈடுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசே வேடசந்தூர் பகுதியில் இயற்கை புகையிலை வேளாண் மையம் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இயற்கை புகையிலை விவசாயத்திற்கு தடை விதிக்கவில்லை.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இயற்கை புகையிலை விற்பனைக்கு எவ்வாறு தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை பதப்படுத்துவதற்கும், விற்பனைக்கும் அதிகாரிகள் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.