தெஹ்ரான்: இந்த ஹிஜாப் போராட்டத்தின் மூலம் நாட்டை சீர்குலைப்பதுதான் எதிரிகளின் நோக்கம் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் இப்ராஹிம் ரெய்சி பேசும்போது, “ இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டை சீர்குலைப்பதும், வளர்ச்சியை தடுப்பதும்தான்.இங்கு நடைபெறும் கலவரங்களும், போராட்டங்களும் தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்குகின்றன” என்றார்.
முன்னதாக ஈரானில் வியாழக்கிழமை ஷிராஸ் பகுதியில் மாஷா அமினிக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர். அப்போது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த நிகழ்வுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தான் ஈரான் அதிபர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமாகியுள்ளது. ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.