எருமை மாட்டின் விலை ரூ.35 கோடி! உண்மையா?

அண்மையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சதர் (Sadar) விழாவில் பார்வைக்காக வைக்கப்பட்ட எருமை மாட்டின் விலை 35 கோடி ரூபாய் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சதர் விழாவானது ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் நடைபெறும். அதில் பல்வேறு வகையான அரியவகை மாட்டினங்களை மக்களின் பார்வைக்காக உரிமையாளர்கள் அழைத்து வருவதுண்டு.

தீபாவளி

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், நகராட்சி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பல வகையான மாட்டினங்கள் அங்குப் பங்கேற்க, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது கருடா என்ற 4 வயது எருமை மாடு.

இந்த எருமையின் உரிமையாளர் மது யாதவ் பேசும்போது, “20 நாட்களுக்கு முன்பு ஹரியானாவில் இருந்து 35 கோடி ரூபாய்க்கு இந்த எருமையை வாங்கினேன். இந்த எருமையின் விலையானது விந்தணுவின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. இம்மாநிலத்தில் முர்ரா வகை எருமை மாட்டினங்களை வளர்க்க பணியாற்றி வருகிறேன். எருமைகளுக்கு ஆப்பிள், பால், பிஸ்தா, பாதாம், முந்திரி, கோழி முட்டை, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பீட்ரூட், விதவிதமான மது வகைகள் போன்ற சிறப்பு உணவுகளைக் கொடுக்கிறேன்’’ என்றார்.

மது யாதவ்

அந்த எருமை உண்மையில் ரூ.35 கோடி மதிப்புக் கொண்டதா? என்பதை அறிய தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தின நாயுடுவிடம் பேசினோம்.

“இந்த விழா நடைபெற்ற ஹைதராபாத்தில் தான் நானும் வசித்து வருகிறேன். எனக்கும் கூட இந்த எருமை வீடியோவை நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள். அதில் சொல்லியிருப்பதைப் போல ஒரு எருமையின் விலை ரூ.35 கோடி என்பதை என்னாலும் நம்ப முடியவில்லை. இதுபற்றி கூடுதல் தகவலறிய ஹைதராபாத்தில் உள்ள முன்னோடி கால்நடைப் பண்ணையாளர்களிடமும் கால்நடை விஞ்ஞானிகளிடமும் பேசினேன்.

நாகரத்தின நாயுடு

`ஆடு, மாடு கால்நடைகள் வளர்ப்பதில் அந்த பகுதி மக்கள் கில் லாடிகள்.ஆனால், ஆண்டு தோறும் அந்த விழாவுக்குக் கூட்டம் சேர்க்க எருமை மாடுகளின் விலையைக் கோடிக்கணக்கில் சொல்லி வருவார்கள். இந்த ஆண்டு யாரும் நம்பவே முடியாத அளவுக்கு எருமையின் விலையை ஏற்றிச் சொல்லியுள்ளார்கள். அதில் உண்மையில்லை’ என்று சொன்னார்கள். ஆகையால், எருமை மாடு விலை ரூ.35 கோடி என்பதை நம்ப வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தகவல் அறிய, மது யாதவை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ் அப் தகவலும் அனுப்பினோம். பதில் வரவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.