உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக ட்விட்டர் (Twitter) விளங்கி வருகிறது. இதனை அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் வாங்கியுள்ளார். இவர் எப்போது வாங்குவார்? என்ற பரபரப்பு கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், நேற்றைய தினம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 44 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டு விட்டது.
இந்த சூழலில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ”பறவை விடுவிக்கப்பட்டது” (The Bird is freed) என ட்விட்டரின் லோகோவை சுட்டிக் காட்டி பதிவு ஒன்றை போட்டுள்ளார். இது தாறுமாறாக வைரலாகி வருகிறது. முன்னதாக நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டு, தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நெட் சேகல்,
சட்டம் மற்றும் திட்டத்துறை தலைவர் விஜயா கட்டே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை பணி நீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளார். இதையடுத்து அவர்கள் ட்விட்டர் தலைமையகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக எலான் மாஸ்க்கின் கவனம் ஊழியர்கள் பக்கம் திருப்பக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே ட்விட்டர் தன்வசமானால் 75 சதவீத ஊழியர்களை நீக்கி விடுவேன்.
வலைதளத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பேன். புதிய செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். நடுநிலையான விஷயங்கள் மட்டுமே இருக்கும் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்த சூழலில் ஊழியர்களை எப்போது தூக்கப் போகிறார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேற்றைய தினம் தனது ட்விட்டரில் நீண்ட தகவல் ஒன்றை எலான் மாஸ்க் பதிவிட்டிருந்தார். அதில், நான் ஏன் ட்விட்டரை வாங்குகிறேன் எனக் கேட்கலாம்.
வருங்கால சமுதாயத்திற்கு ஒரு பொதுவான டிஜிட்டல் டவுன் ஸ்கொயர் தேவைப்படுகிறது. அதில் பல தரப்பட்ட விஷயங்களை ஆரோக்கியமான முறையில் விவாதிக்க வேண்டியுள்ளது. வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காமல் இதனை செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் சமூக வலைதளங்கள் வலது மற்றும் இடது என இருதரப்பட்ட சிந்தனைகளை விதைக்கக் கூடியவைகளாக இருக்கின்றன.
இதன்மூலம் வெறுப்புணர்வும், உலக மக்களிடையே பிளவுகளும் ஏற்படுகின்றன. இது நல்லதல்ல. எனவே தான் ட்விட்டரை வாங்கியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் வாஷ் பேஷினை கையில் தூக்கி கொண்டு ட்விட்டர் தலைமையகத்திற்குள் எலான் மாஸ்க் நுழைவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக ட்விட்டர் அலுவலகத்தில் இன்றைய தினம் நல்ல மனிதர்கள் பலரை சந்தித்தேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.