சாயல்குடி : கடலாடியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் 5ம் ஆண்டு வருடாபிஷேகம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 60ம் குருபூஜை மற்றும் கடலாடி தேவர் மகா சபையின் 34 ம் ஆண்டு முளைப்பாரி திருவிழாவையொட்டி ஆப்பனாடு பந்தய குழு சார்பாக நான்கு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. மாட்டுவண்டி போட்டிக்கு முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, அதிமுக ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன்,பஞ்சாயத்து தலைவர் ராஜமாணிக்கலிங்கம் முன்னிலை வகித்தனர்.
தேவர் மகாசபை தலைவர் முனியசாமி வரவேற்றார். கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பெரியமாடுகள் போட்டியில் 19 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் முதல் பரிசினை மதுரை அவனியாபுரம் மோகனசாமியின் மாடுகளும், இரண்டாம் பரிசினை தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாடுகளும், மூன்றாம் பரிசினை திருநெல்வேலி மாவட்டம், கடம்பூர் கருணாகரராஜா மாடுகளும், நான்காம் இடத்தை குமராட்டியபுரம் மகாவிஷ்ணு, அப்துல்காதர் மாடுகள் பெற்றன.
4 கிலோ மீட்டர் தூரம் நடந்த நடு மாடுகள் வண்டி போட்டியில் 22 வண்டிகள் கலந்துகொண்டது. இதில் முதல் பரிசினை மதுரை அவனியாபுரம் மோகனசாமியின் மாடுகளும், இரண்டாம் பரிசினை தூத்துக்குடி சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமாரின் மாடுகளும், மூன்றாம் பரிசினை ஜெய்ஹிந்த்புரம் முருகனின் மாடுகளும், நான்காம் பரிசினை காளிமுத்துவின் மாடுகளும் பெற்றன. 3 கிலோ மீட்டர் தூரம் நடந்த சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 42 வண்டிகள் கலந்துகொண்டது.
இதில் இரண்டு சுற்றுகளாக நடந்தது. முதல் சுற்றில் சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடுகள் முதல் இடத்தையும், காளிமுத்துவின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், கடலாடி முனியசாமி பாண்டியன், பெத்தாட்சி அம்மன் மாடுகள் மூன்றாம் இடத்தையும், ரோஹித் மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றது.இரண்டாவது சுற்றில் சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாடுகள் முதல் இடத்தையும், சீவலப்பேரி சுப்பையாவின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், பரமசிவம் மாடுகள் மூன்றாம் இடத்தையும், அதிகரை மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றது.
மாட்டு வண்டி ஓட்டிய சாரதி, துணை சாரதிக்கு கிடாய் மற்றும் ரொக்கப்பரிசு போன்ற சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆப்பனாடு மாட்டுவண்டி பந்தயகுழுவினர் செய்திருந்தனர்.