நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 1991-1996ம் காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா வாங்கினார். இந்த எஸ்டேட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்த வந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பால் அவரும் சிறைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு கொடநாடு எஸ்டேட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொலை மற்றும் கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகித்த ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
அதேப்போல் மற்றொருவரான சயான் என்பவர் சென்ற கார் கேரளாவில் விபத்துக்கு உள்ளானது. இதில் சயான் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர்தப்பினார்.
இதற்கிடையில் கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் யாரும் எதிர்பாராத விதமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த திகில் சம்பவங்கள் அரங்கேறியபோது தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். இதனால் இந்த விவகாரம் குறித்து பெரிய அளவில் போலீஸ் அக்கறை காட்டாமல் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கொடநாடு வழக்கு தோண்டி எடுக்கப்படும் என கூறி இருந்தார். அதன்படியே திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் அதிரடி ஆரம்பமானது.
சயான் வாக்குமூலத்தின் அடிப்படையில் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கில் அனைத்து குற்றமும் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டளைப்படி நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இவ்வழக்கு சம்மந்தமான 1500 பக்கம் கொண்ட அறிக்கை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் மற்றும் சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதன்படி சிபிசிஐடி டிஜிபி ஷக்கில் அக்தர் தலைமையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல், டிஎஸ்பி அண்ணாதுரை, சந்திரசேகர், வினோத் ஆகிய 3 டிஎஸ்பிக்கள், ஆய்வாளர் தனலட்சுமி ஆகிய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கொடநாடு எஸ்டேட்டில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின்போது கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அன்று இரவு கிருஷ்ணதாபா, ஓம்பகதூர் ஆகிய 2 பேரும் காவல் பணியில் இருந்த நிலையில் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதும், கிருஷ்ணதாபா அங்கிருந்து தப்பியதும் தெரிய வந்துள்ளது.
தற்போது கிருஷ்ணதாபா குடும்பத்துடன் நேபாளம் நாட்டில் வசித்து வருவதை போலீசார் உறுதி செய்ததை தொடர்ந்து, இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் நேபாளம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் அடுத்தடுத்து பிடி இறுகி வருவதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.