கோவை கார் வெடி விபத்து: முபீன் குறித்து காவல்துறை சொன்ன முக்கிய தகவல்!

கோவையில் கார் வெடித்த நிகழ்வின்போது காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக, முபீன் மேற்கொண்டு தொடர்ந்து அந்த வாகனத்தில் செல்ல முடியாமல் இருந்தது தெரியவந்துள்ளதாகவும், பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி காவல் துறை பாராட்டு தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் மொத்தம் 27 பேருக்கு பாராட்டுச் சான்றிதழும், பண வெகுமதியும் காவல்துறை இயக்குநரால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “இவ்வழக்கில் சம்பவ தினமாகிய 23.10.2022-ஆம் தேதியன்று இரவு சம்பவ இடத்திற்கு அருகில் உக்கடம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜன் மற்றும் அவருடன் இருந்த காவலர் தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்ததின் காரணமாக, விபத்தில் இறந்துபோன நபர் வாகனத்தில் தொடர்ந்து செல்ல வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம் என்று தெரியவருகிறது.
image
அதன் காரணமாக, வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் அவருடன் இருந்த இரண்டு காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், வெகுமதியும் வழங்கப்பட்டது. மேற்கண்ட காவலர்கள் பெரிய அளவில் ஏற்பட இருந்த பாதிப்பைத் தடுக்க உதவியதற்காக வெகுமதி வழங்கப்பட்டது. மேலும் இவ்வழக்கில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு இறந்துபோன ஜமேஷா முபீன் என்பவரின் வீட்டை முறையாக, முழுமையாக சோதனையிட்டு வீட்டிலிருந்த வெடிப்பொருட்களை கைப்பற்றியதின் வாயிலாக மேற்கொண்டு எந்தவித அசம்பாவிதமும் நிகழாவண்ணம் தடுத்துள்ளார்கள்.
அவர்களின் அந்த சிறப்பான பணிக்காக வெகுமதி வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறையினர், கோவை மாநகர் முழுவதும் மேற்கொண்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக சட்டம் (ம) ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு நகரில் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.